பிரியாவிடை கெளரவிப்பு நிகழ்வு | 15 ஜூன் 2026
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களின் தலைமையில், ஓய்வுபெற்றுச் செல்லும் உமர்தீன் ரஜீதா (SDO) மற்றும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆதம்பாவா பஸ்லி ஆகியோருக்கான பிரியாவிடை கெளரவிப்பு நிகழ்வு 15 ஜூன் 2026 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கம் சிறப்பாக ஏற்பாடு செய்தது. இருவருக்குமான அன்பளிப்புகள் பிரதேச செயலக கிளை சார்பில் வழங்கி வைக்கப்பட்டன. நீண்டகாலம் சேவையாற்றிய இவ்விரு உத்தியோகத்தர்களையும் செயலகக் குடும்பம் அன்புடன் வழியனுப்பிவைத்தது.
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு | 11 ஜூன் 2026
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான ஒழுக்காற்று நடைமுறைகள், நேர முகாமைத்துவம், விடுமுறை முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவ பண்புகள் தொடர்பான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு 11 ஜூன் 2026 வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் வளவாளராக வெருகல் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார். உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இந்த பயிற்சி செயலமர்வு உத்தியோகத்தர்களின் தொழில்முறை திறன், நேர ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சிறப்பாக நடைபெற்றது.
உலக சுற்றாடல் தின நிகழ்வு|05.06.2026
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, வாழைச்சேனையில் அமைந்துள்ள ஏ.எச். பாலர் பாடசாலையில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று உதவி பிரதேச செயலாளர் திருமதி ஜுமானா ஹஸீன் அவர்களின் தலைமையில் 2026.06.05 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சர்ஜூன், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. அஸ்ரப், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. தாசிம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் திரு. நிஸாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சிறுவர்களிடையே சுற்றாடல் தொடர்பான பொறுப்புணர்வை வளர்ப்பதும் இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்தது.
பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்தப் பயிற்சி செயலமர்வு — இறுதி நாள் | 11 ஜூன் 2026
"பிணக்குகள் குறைந்து, மகிழ்ச்சியால் நிரம்பிய அமைதியான பாடசாலை சூழலை உருவாக்குவோம்" என்ற தொனிப்பொருளில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவும் கல்வி அமைச்சும் இணைந்து நடத்திய மூன்று நாள் மத்தியஸ்தப் பயிற்சி செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வு 11 ஜூன் 2026 அன்று மட் தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் ஏ. ஜுமானா ஹஸீன், பாடசாலை அதிபர் எம்.ஏ. அஸீஸ் (SLPS), மாவட்ட மத்தியஸ்தப் பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். ஆஸாத், மாவட்ட பாடசாலை மத்தியஸ்த இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். அஜுன் (நளீமி) ஆகியோர் கலந்துகொண்டனர்.
வளவாளர்களாக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எல். ஆஷாத், திருமதி நதீசன் ஜீவிதா, திருமதி இம்திஸா மற்றும் பொறுப்பாசிரியர் திருமதி சமீனா நஜீம் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர். இப்பயிற்சி செயலமர்வு மாணவர்களிடையே வன்முறையற்ற தொடர்பாடல், முரண்பாடுகளை சமரசமான முறையில் தீர்க்கும் திறன் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சிறப்பாக நடைபெற்றது.
"கடமைகளைச் செய்வோம் — உரிமைகளை வெல்வோம்" | வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை|04.06.2026
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், "கடமைகளைச் செய்வோம் — உரிமைகளை வெல்வோம்" என்ற தொனிப்பொருளில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஏ. ஜூமானா கஸீன் அவர்கள் மனோகரி உள ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை செயன்முறை ரீதியாக மாணவர்களுக்கு வழங்கினார். சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ. நஜிப்கான் தொற்றாநோய்கள் தொடர்பாகவும், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஜி.எஸ். நிலந்தி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாகவும் விழிப்புணர்வு வழங்கினர்.
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.ஆர். தாஸிம், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் பீ. மகேந்திரன், உளவளத்துணை உத்தியோகத்தர் எஸ். விக்கேனஸ்வரி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


















